ஸ்ரீ அனுமன் புகழ்
ஸ்ரீ அனுமன் புகழ்
துளசிதாசர் இயற்றிய "ஹனுமான் சாலிஸா"வை தழுவியது.
குருவின் பாத தூசை எடுத்து
மருகும் மனதின் அவலம் துடைத்து
அறம் பொருள் இன்பம் வீட்டை வெல்வேன்
ஸ்ரீ ராமர் புகழை பாட்டில் சொல்வேன்
என் அறிவின் சிறுமை நினைத்து அழுகிறேன்
உன் அழகிய திருவடி அணைத்து தொழுகிறேன்
வலிமை அறிவு ஞானம் தருவாய்
துன்பம் தவறுகள் உடனே களைவாய்
அகிலம் போற்றும் அஞ்சனை மகனே
வானவர் போற்றும் வானரர் தலைவா
மூன்று உலகையும் உணர்வுற செய்வாய்
வெற்றிக் கனியை அனுதினம் கொய்வாய்
காற்றின் கன்றே கடலைக் கடந்தாய்
அன்னை சீதையின் கவலைக் களைந்தாய்
ராம தூதனை வென்றவர் இல்லை
உன் ஆற்றலை அளக்க வானமே எல்லை
தீமையைக் கண்டால் தீயை வைப்பாய்
நன்மை செய்தால் தாயாய் காப்பாய்
உன் உடலின் வலிக்கு இல்லை இணையே
என் மனதின் வலிக்கு நீ தான் துணையே
கடல் போல் விரிந்த பொன்னிற தேகம்
அதன் மேல் அலையென அழகிய கேசம்
வண்ணப் பட்டாடை உன் பொலிவை பேசும்
காதின் குண்டலம் உன் உள்ளொளி வீசும்
உன் கையின் கதாயுதம் இடி போல் இறங்கும்
உன் நாவில் ராம் ராம் கொடி போல் விளங்கும்
முஞ்சை புல்லால் பூணூல் அணிந்தாய்
ஸ்ரீ ராமர் திருவடி அன்புடன் பணிந்தாய்
பிறை சடை அய்யனின் அம்சம் நீயே
குறையில்லா காற்றின் குழந்தை நீயே
கேசரி வளர்த்த கேசரி நீயே
உலகம் வியக்கும் உன் தேஜஸ் தீயே
அனைத்தும் அறிந்த அறிஞன் நீயே
நினைத்து வியக்க குணவான் நீயே
ஸ்ரீ ராமர் திருவாய் ஒரு வார்த்தை சொல்ல
காத்திருக்கிறாய் இவ்வுலகை வெல்ல
ஸ்ரீ ராமரின் நற்குண நினைவில் நிறைவாய்
ஸ்ரீ ராமர் புகழில் உள்ளம் கரைவாய்
ஒரு முறை கோபத்தில் நீ நெஞ்சை பிளக்க
அதில் ராமர் தோன்றினார் உன் பக்தியை விளக்க
அணிமா சக்தியால் உருவை குறைத்தாய்
ஸ்ரீ ராமர் செய்தியை சீதைக்கு உரைத்தாய்
ஆக்ரோஷம் கொண்டு விஸ்வரூபம் தரித்தாய்
அனலை கொண்டு இலங்கை எரித்தாய்
இமயம் சென்று மலையை தூக்கினாய்
களத்தில் லக்ஷ்மணர் மயக்கம் போக்கினாய்
தன் உயிரே கிடைத்ததாய் ராமர் மகிழ்ந்தார்
பரதனுக்கு நீயே இணையென புகழ்ந்தார்
முனிகள் ரிஷிகள் யோகியர் தவசியர்
பிரம்மா முதலாம் தேவர் பலரும்
திரிலோகம் திரியும் நாரத முனியும்
உன் பெருமை அளந்து தோல்வியே கண்டார்
சனத்குமாரர் நால்வர் நாவும்
ஆதிசேஷன் ஆயிரம் வாயும்
சிவனும் யமனும் இன்னும் பலரும்
உன் புகழை பாட இயலாதென்றார்
ராமர் சுக்ரீவர் நண்பர் ஆக்கினாய்
உன் தலைவனை நீ தான் அரசனாக்கினாய்
வீர விபீஷணன் உன் பாதம் பணிந்தான்
உன் சொல்படி நடந்து ராஜ்யம் அடைந்தான்
நீ பால அனுமனாய் பறப்பதை பார்த்தவர்
சிவந்து நிற்கும் அந்திச் சூரியன்
அனுமன் வாயில் ஜிலேபி என்றார்
அவன் திறனுக்கு இதெல்லாம் ஜுஜுபி என்றார்
ராமரைப் பாடி உன் பக்தனாய் ஆனார்
கனவில் கூட கடினம் காணார்
ராம ராஜ்யத்தின் வாயில் காத்தாய்
உத்தமரை மட்டுமே உள்ளே சேர்த்தாய்
மூன்று உலகும் நீ முனிந்தால் மருளும்
உன் எண்ணத்திற்கேற்ப நவகோள் உருளும்
மனதில் பதிந்தால் உந்தன் பாதம்
அருகில் வராது பிசாசு பூதம்
எனை நீ காத்தால் கவலை இல்லை
உன் பாதுகாவலில் நெருங்குமோ தொல்லை?
உடலை வாட்டும் நோயும் அகலும்
மனதை வாட்டும் துன்பம் விலகும்
மனதால் வாக்கால் செயலால் உன்னை
மனனம் செய்வதால் காப்பாய் என்னை
நீ ஆற்றலை பக்தியால் மறைத்திடும் ஞானி
என் நிலையை உயர்த்திட நீயே ஏணி
பக்தவத்சலர் ஸ்ரீ ராமர் பணியை
முடிப்பதில் பறித்தாய் வெற்றிக் கனியை
அல்லும் பகலும் உனை அயராது தொழுதால்
சிற்றின்ப ஆசைகள் சீக்கிரம் நிறைவேறும்
பேரின்பப் பெருநிலை இதயத்தில் குடியேறும்
நல்லோர் ஞானியரை அன்போடு பார்க்கிறாய்
கண்ணின் கருமணியை இமைபோல காக்கிறாய்
ஸ்ரீ ராமர் மனதுக்கு உகந்தவன் நீயே
தீய சக்தியை அழிக்கும் தீயே
அன்னை சீதை உனை பிள்ளையாய் பார்த்தாள்
அக்னி தேவன் உனை சுடாது காத்தாள்
நீ கைக்கால் முளைத்து நடமாடும் பக்தி
உன் திருவடி பிடித்தார்க்கு தருவாய் முக்தி
உன்னை தொழுதால் ஸ்ரீ ராமர் அருள்வார்
தன்னையே தொழுததாய் எண்ணி மகிழ்வார்
உன்னை தொழுதவன் அடைவான் வைகுண்டம்
அவனை நெருங்குமோ காலனின் எமகண்டம்?
உனையே துதித்தார்க்கு நீ இன்ப ஊற்று
உன் பக்தர்க்கு உனை விட்டால் ஏது மாற்று
இனிய வீரனே நீ எல்லாம் வல்லவன்
எளிய பக்தரின் துன்பம் தீர்ப்பவன்
பரந்த இவ்வுலகில் நீ எதுவும் முடிப்பாய்
என் துன்பத்தை துயரத்தை விரட்டி அடிப்பாய்
உலகம் முழுதும் உந்தன் பெருமை
அதை அறியாதது அவரவர் சிறுமை
என் அரசன் அனுமனுக்கு ஜே ஜே சொல்கிறேன்
உன்னை மட்டுமே என் குருவாய் கொள்கிறேன்
இந்தத் துதியை தினமும் படிப்பேன்
கர்ம வினைகளை நொடியில் பொடிப்பேன்
இதை தினமும் படித்தால் சிவனார் குளிர்வார்
யோகியர் விரும்பும் பரிபூரணம் தருவார்
துளசிதாசர் போலவே உன் அன்பை தேடினேன்
என் இதயத்தில் நீ அமர உன் திருவடி நாடினேன்
வாயு புத்திரா அஞ்சனை மைந்தா
ராம பக்தா சூரியன் சிஷ்யா
சீதா ராம லக்ஷ்மணரோடு வருவாய்
அடியேன் இதயத்தில் அன்புடன் குடிபுகுவாய்
சரணம் சரணம் இறைவா சரணம்
சரணம் சரணம் குருவே சரணம்
சரணம் சரணம் அறிவே சரணம்
சரணம் சரணம் அருளே சரணம்
போற்றி போற்றி இறைவா போற்றி
போற்றி போற்றி குருவே போற்றி
போற்றி போற்றி அறிவே போற்றி
போற்றி போற்றி அருளே போற்றி
என் அனுமனுக்கு ஜே ஜே
என் அரசனுக்கு ஜே ஜே
ராம பக்தருக்கு ஜே ஜே
ஸ்ரீ ராமருக்கு ஜே ஜே
No comments:
Post a Comment